| |
Thursday November 18, 2004
நன்றி, சங்கரா! நன்றி!!
நா.முத்து நிலவன்
*சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு! சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!! நன்றாகப் புரியவைத்த உனக்கு, நன்றி சங்கரா நன்றி! நா.முத்து நிலவன் *பெரியார் சொல்லை எகத்தாளம் செய்தவர்கள்- உன் செயல்களால் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்- கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லையென்று! நன்றி சங்கரா நன்றி! *காவியைக் கழற்றி, தண்டத்தை உதறி, ஏற்கெனவே நீ இருமுறை ஓடிப் போனாய்! 'அது தண்டம் தான் ' என்று அப்போதே புரிந்துகொள்ளாதவர்களும் இப்போது புரிந்துகொண்டார்கள்! காவியை வெளுத்துக் க(ா)ட்டிய உனக்கு நன்றி சங்கரா நன்றி! *உன்காலைத் தொட்டுவணங்க அப்பாவி மக்களையும் நீ அப்போது அனுமதிக்கவில்லை! இப்போது புரிந்துவிட்டது- உழைக்கும் மக்களைத் தொடக்கூட உனக்குத்தான் தகுதியில்லை என்று, அவர்களுக்கும் புரியவைத்த உனக்கு நன்றி சங்கரா நன்றி! *உன்காலில் விழுந்ததைப் பெருமையோடு சொன்னவர்கள், இப்போது- சிறுமையோடு தலைகுனிந்திருக்கிறார்கள்! *குளித்துவிட்டுக் கோவிலுக்குள் வரச்சொன்னாய்! எந்தக் குளத்தில் விழுந்தாலும் இந்த அழுக்கைக் கழுவ முடியாது என்பதைப் புரியவைத்த உனக்கு நன்றி சங்கரா நன்றி! *விவேகானந்தரும், திரு.வி.க.வும், அடிகளாரும் போன்றோர் அணிந்தால் தவிர காவியை நாங்கள் 'கபட வேடம் 'என்றே கருதுகிறோம். எங்கள் கருத்து சரிதான் என்று மீண்டும் புரியவைத்த உனக்கு நன்றி, சங்கரா நன்றி! *சங்கராச்சாரி முன் சனாதிபதியும் நிற்கிறாரே என சாமானியர்கள் பயந்தார்கள்! அதுதானே உன் சாம்ராச்சியம்! இப்போது - நீ நின்று விளக்கம்தர, நீதிபதி உட்கார்ந்து தீர்ப்பளிக்க ஜன சட்ட நீதி புரிந்தது! நன்றி சங்கரா நன்றி! *காலையில் ஆசி வழங்கி மாலையில் கைதான லோக குருவே! உன்னால் எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை என்பதால் உனக்கு இப்போது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது! 'மடச்சாமிகள் ' பற்றி மக்கள் புரிந்துகொள்ள, இனி நடக்கப் போவதாவது நன்றாகவே நடக்கட்டும்! நன்றி சங்கரா நன்றி! - நா.முத்து நிலவன் muthunilavan@yahoo.com ====
Copyright:Thinnai.com
|
|