Friday January 4, 2008
தவளை ஆண்டு 2008
தவளை ஆண்டு 2008
தந்தை கையைப் பிடித்துக் கொண்டு
தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது
தத்தித் தத்தி நான் நடந்த போது
தாவித் தாவிக் குதித்த தவளை
பாசி படர்ந்த குட்டைக்குள்ளே
பச்சை நிறத்தில் நீந்தும் தவளை
பாவி மனுஷன் சூப்பு வைக்க
பரிதாபமாய் பலியாகும் தவளை
தூண்டிலில் உணவாய் உயிர்விடும் தவளை
பாம்பின் பசிக்கு புசியாகும் தவளை
மனம் கல்லாய்ப் போன மனிதருக்கும்
மருந்தாய் இருந்திட மரித்திடும் தவளை
அந்தி மழை பொழியும் போதும்
அடை மழை வழியும் போதும்
அல்லும் பகலும் பேதமின்றி
அயராமல் கத்தி மகிழும் தவளை
அழிந்து வருதாம் அந்தத் தவளையினம்
அக்கறை கொண்ட ஐநா சபை
ஆண்டு 2008-ஐ தவளை ஆண்டாய்
அறிவிப்புச் செய்திட்ட ஆறுதலோடு
ஆரம்பமாகிற்று அடுத்ததோர் ஆண்டு
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
jpbenedict@hotmail.com
Copyright:thinnai.com