Thursday May 21, 2009
என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
ஹெச்.ஜி.ரசூல்
என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.
அதிலிருந்து பாயும் குண்டுகள்
எதிரிகளை ஒவ்வொன்றாக
சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புத்தனை கொன்றுவிட்டு வந்த
சீடனொருவன் பிணமானான்.
காந்தியை படுகொலை செய்த
இந்தியன் ஒருவன் பிணமானான்
மாவோவை கொன்று புதைத்துவிட்டு
ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.
என் இருப்பிடத்திலிருந்து
முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்
பரவும் புகை மண்டலங்களில்
எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.
ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து
ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.
நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்
குண்டுகள் துளைத்திருக்கின்றன.
என் விரல்களின் வேகம் குறைய
என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.
தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து
என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கும் தெரியாது
அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.
குண்டுகள் தீர்ந்த பின்னரும்
என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.
Copyright:thinnai.com