Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Friday April 15, 2005

அன்புள்ள ஆசிரியருக்கு

அருளடியான்


அன்புள்ள ஆசிரியருக்கு,

அரவிந்தன் நீலகண்டன், 'ஈ.வெ.ரா. பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்று இருக்குது ' என்று எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் குடியரசு, துக்ளக் ஆசிரியர் சோவை 'துளி விஷம் ' என்று ஒரு கவியரங்கத்தில் குறிப்பிட்டார். சோவின் ஓரெழுத்துப் பெயருக்கு துளி என்ற சொல் என்றால், அவரது எழுத்துக்களைச் சுட்ட விஷம் என்ற சொல். முழு உணவையும் நஞ்சாக்க துளி விஷம் போதுமே! தமிழனின் கலை, பண்பாடு என்ற உணவில் சோ, தன் திரைப்பட நடிப்பு, நாடகம், பத்திரிக்கை, அரசியல் பங்கேற்பு என துளி துளியாய் விஷம் கக்கியவர். அந்த விஷமே அரவிந்தன் நீலகண்டனுக்கு மருந்தாய் தெரிவது வியப்பில்லை. சிறுபான்மையினர் மீதான வெறுப்பில், சோவுக்கு அண்ணன் தானே அரவிந்தன் நீலகண்டன் ? சோ, மாநிலங்களவை உறுப்பினராய் தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் என்ன நன்மை செய்தார் ? தமிழ் நாட்டுக்கு காவிரி நீரில் உள்ள உரிமையை நிலை நாட்ட என்ன செய்தார் ? தமிழர்கள் வெறுத்த வகுப்புவாதத்தை இந்திய தேசியத்தின் பெயரால் அவர்கள் மீது திணித்ததைத் தவிர சோ தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்தது என்ன ? தமிழுக்கு செம்மொழி தகுதி தரப்பட்டதை கிண்டல் செய்தார். தனித் தமிழ் ஈழம் அமைவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தித் திணிப்பை ஆதரித்து எழுதினார். மண்டல் குழு அறிக்கையை எதிர்த்தார். நள்ளிரவு கலைஞர் கைதை தமிழகமே கண்டித்த போது, அதை ஆதரித்தார். சங்கராச்சாரி

கைதை தமிழகமே ஆதரித்த போது, அதைக் கண்டித்தார். பெண்கள் வேலைக்கு செல்வதை சங்கராச்சாரியாரைப் போலவே கிண்டல் செய்தார். பெண்ணடிமையை வலியுறுத்தி கேள்விகளுக்கு பதிலாகவும், கட்டுரைகளாகவும் எழுதியவர். நடிகர் எஸ்.வி.சேகர், ஆர். எஸ். எஸ், இந்து முண்ணணி ஆதரவாளராகவும், சங்கராச்சாரியாரின் சேவகராகவும் இருந்தார். இப்போது, ஜெயலலிதாவின் தொண்டராக மாறி விட்டார். எஸ்.வி. சேகர், தன் நகைச்சுவைப் பேச்சால் கூட்டம் சேர்க்கிறார். சற்று வயதான எஸ்.வி. சேகர் தான் சோவே தவிர, சோ ஓர் அறிஞரோ, தமிழர்களுக்கு நன்மை செய்தவரோ கிடையாது. பரினாம வளர்ச்சி என்பது டார்வினின் ஒரு கோட்பாடு தானே தவிர நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மை அல்ல. பரினாம வளர்ச்சிக் கோட்பாடு மீது ஆழ்ந்த காதல் உள்ள இந்துத்துவவாதியான அரவிந்த நீலகண்டனைப் போல, பரினாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்களும் உள்ளனர். பரினாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது பிற்போக்குத் தனம் அல்ல. மாறாக, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்துக்காக, சோ போன்றவர்களை தலை மீது வைத்து தூக்கிக் கொண்டாடுவது தான் பிற்போக்குத் தனம்.

நன்றி!

அன்புடன்

அருளடியான்




Copyright:Thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.